Thursday, February 14, 2008

எதிர்நோக்கு

"இயற்கையின் புதல்வர்"

தேர் இல்லை. திருவிழா இல்லை. தெய்வம் இல்லை என்கிறார் நாயக்கர். சுவாமியைக் குப்புறப் போட்டு வேட்டிதுவைக்கலாம் என்கிறார். இவரைக் காட்டிலும் பழுத்த நாஸ்திகன் வேறு எவருமே இருக்க முடியாது. பாதகன் என்றுசிலர் உறுமுகிறார்கள். வீட்டைக் கட்டி வைக்கோலைத் திணிப்பதைக் காட்டிலும், வீடு கட்டாமலே, வைக்கோலைப்போராய்ப் போடலாம் என்ற சிக்கன யோசனை சொல்வது தவறா? அழுகி அழுகிப் போய்ப் புழு நெளியும் உடலுடன் இருப்பதைக் காட்டிலும் உயிர்விடுவது உத்தமம் என்று அபிப்பிராயம் கொடுத்தால், சாகச் சொல்லுகிறான், பாவி என்று திட்டுவதா, கண்டவர்க்கெல்லாம் குனிந்து சலாம் செய்து, மண்ணோடு மண்ணாய் ஒட்டிக் கொண்டு மார்பால் ஊர்ந்து செல்ல வேண்டாம் என்று சுயமரியாதை உணர்ச்சியை ஊட்டினால், பாபி, நமஸ்காரத்தைக் கண்டிக்கிறான் என்று அபத்தம் பேசுவதா? மனச்சாட்சிக்கும் தொண்டுக்கும் பக்தரான நாயக்கரை, நாஸ்திகன் என்று அழைக்கும் அன்பர்கள், நாஸ்திகம் யாது என்றே தெரிந்து கொள்ளவில்லை என்றே நான் சொல்லுவேன். அநீதியை எதிர்க்கத் திறமையும் தைரியமும் அற்ற ஏழைகளாய் ஸ்மரணையற்றுக் கிடந்த தமிழர்களின் உள்ளத்தை, அடி தெரியும்படி கலக்கிய பிரமாண்ட பாக்கியம், நாயக்கரைப் பெரிதும் சேர்ந்ததாகும்.

அப்பா நாயக்கரின் அழகுப் பிரசங்கத்தை, ஆணித்தரமான சொற்களை, அணியணியாய் அலங்காரஞ் செய்யும்உவமானங்களை, உபகதைகளை, அவரது கொச்சை வார்த்தை உச்சரிப்பை, அவரது வர்ணனையை, உடல் துடிதுடிப்பைப் பார்க்கவும் கேட்கவும், வெகுதூரத்திலிருந்து ஜனங்கள் வண்டுகள் மொய்ப்பது போல் வந்து மொய்ப்பார்கள். அவர்கள் இயற்கையின் புதல்வர். மண்ணை மணந்த மணாளர். மண்ணோடு மண்ணாய் உழலும் மாந்தர்களுக்கு, நாயக்கரின் பிரசங்கம் ஆகாய கங்கையின் பிரவாகம் என்பதில் சந்தேகமில்லை. செய்ய வேண்டும் என்று தோன்றியதைத் தயங்காமல் செய்யும் தன்மை அவரிடம் காணப்படுவதைப் போல, தமிழ்நாட்டில் வேறு எவரிடமும் காணப்படுவதில்லை. தமிழ்நாட்டின் வருங்காலப் பெருமைக்கு, நாயக்கர் அவர்கள் முன்னோடும் பிள்ளை.


-------------------------------------------------------------------------------------- முற்றுமுணர்ந்த பேராசிரியர்

தமிழ்நாட்டில், இராமசாமியாரின் பிரசங்கம் ஒன்றை மட்டுந்தான், என்னால் மூன்றுமணி நேரம் உட்கார்ந்து கேட்கமுடியுமென்று தயங்காமல் கூறுவேன்.

அதிக நீளம் என்னும் ஒரு குறைபாடு இல்லாவிட்டால், ஈரோடு ஸ்ரீமான் ஈ.வே.ராமசாமி நாயக்கருக்குத் தமிழ்நாட்டுப்பிரசங்கிகளுக்குள்ளே முதன்மை ஸ்தானம் தயங்காமல் அளித்து விடுவேன்... அவர் உலகாநுபவம் என்னும் கலாசாலையில்,முற்றுமுணந்த பேராசியர் என்பதில் சந்தேகமில்லை. எங்கிருந்துதான் அவருக்கு அந்தப் பழமொழிகளும், உபமானங்களும்,கதைகளும், கற்பனைகளும் கிடைக்கின்றனவோ நானறியேன்.

இராமசாமியாரின் பிரசங்கம், பாமர ஜனங்களுக்கே உரியது என்று ஒரு சிலர் கூறக்கேட்டிருக்கிறேன். பாமர ஜனங்களைவசப்படுத்தும் ஆற்றல், தமிழ்நாட்டில் வேறெவரையும் விட, அவருக்கு அதிகம் உண்டு என்பதில் சந்தேகமில்லை. ஆனால்,இதிலிருந்து அவருடைய பிரசங்கம், படித்தவர்களுக்கு ரசிக்காது என்று முடிவு செய்தல் பெருந்தவறாகும். என்னைப்போன்ற அரைகுறைப் படிப்புக்காரர்களையன்றி. முழுவதும் படித்துத் தேர்ந்த பி.ஏ., எம்.ஏ., பட்டதாரிகளுங்கூடஅவருடைய பிரசங்கத்தைக் கேட்டு மகிழ்ந்திருக்கிறார்கள். அவருடைய விவாதத்திறமை அபாரமானது. இவர் மட்டும்வக்கீலாகி வந்திருந்தால், நாமெல்லாம் ஓடு எடுத்துக் கொள்ள வேண்டியதான் என்று ஒரு பிரபல வக்கீல், மற்றொருவக்கீல் நண்பரிடம் கூறியதை நான் ஒரு சமயம் கேட்டேன்.

உபயோகமற்ற வாதங்களும், அவர் வாயில் உயிர் பெற்று விளங்கும். ஒர் உதாரணம் கூறி முடிக்கிறேன். ஒரு ஜில்லாவில்சுமார் 30,000 வாக்காளர்கள் இருப்பார்கள். அபேட்சகராக நிற்பவர். இந்த 30,000 கார்டாவது போடவேண்டும். சர்க்கார் தபால் இலாகாவுக்கு, லாபம் இத்துடன் போகாது. இந்த அபேட்சகர் செத்துப்போய்விட்டதாக, எதிரி அபேட்சகர் ஒரு வதந்தியைக் கிளப்பி விடுவார். நான் செத்துப்போகவில்லை. உயிருடன்தான்இருக்கிறேன் என்று, மறுபடியும் 30,000 கார்டு போட வேண்டும்.

நாயக்கரின் இந்த வாதத்தில், அர்த்தமேயில்லை என்று சொல்ல வேண்டுவதில்லை. அதுவும், எழுத்தில், பார்க்கும்போதுவெறும் குதர்க்கமாகவே காணப்படுகிறது. ஆனால் அப்போது ஸ்ரீமான் நாயக்கர் கூறிவந்தபோது, நானும் இன்னும் 400ஜனங்களும், ஒவ்வொரு வாக்கியத்துக்கும் ஒருமுறை கொல் என்று சிரித்து மகிழ்ந்தோம்.
------------------------------------------------------------------------------------
எவ்வுயிரும் என்னுயிர்போல்

சாதி சமயப் பூசல்களை யொழித்து, "எவ்வுயிரும் என்னுயிர்போல் எண்ணி யிரங்கித்' திருவருள் நெறி நின்று ஒழுகுதலாகிய பழந்தமிழ்க்கொள்கையே சைவநன்மக்கட் குரிய உண்மைக் கொள்கையாயிருந்தும், முப்பத்தைந்தாண்டுகட்கு முன், சொற்பொழிவாலும் நூல்களாலும் யான் அதனை விளக்கிய காலையில், அதனை எதிர்த்தும் என்னைப் பகைத்தும் எனக்குத் தீது செய்தவர்கள் சைவரிற் கற்றவர்களே, அஞ்ஞான்று எனக்குதவியாய் நிற்றற்கு எவருமில்லை.

பின்னர்ப் பெரியார் திரு. ஈ.வே. இராமசாமி அவர்கள், யான் விளக்கிய கொள்கைகளையே மேலுந் திட்பமாய் எடுத்து விளக்கிப் பேசவும் எழுதவுந் துவங்கிய காலந்தொட்டு, ஆரியச் சேர்க்கையால் தமிழ்மொழிக்குந் தமிழர் கோட்பாட்டிற்குத் தமிழரது வாழ்க்கைக்கும் நேர்ந்த குறைபாட்டைத் தமிழர் உணர்வராயினர். அவரிற் கற்றவரும் என் மேற்கொண்ட சீற்றந் தவிர்வாராயினர். ஆதலாற், பெரியார் இராமசாமி அவர்களின் தமிழ்த்தொண்டைப் பெரிதும் பாராட்டி, அவர்கள் நீடு இனிது வாழ்கவென்று திருவருளை வேண்டி வாழ்த்துகின்றேன்.
---------------------------------------------------------------------------------------
பெரிய புரட்சிக்காரர்
பெரியாரின் பணி, தற்குறிகள் நிரம்பிய தமிழகத்திலே, கல்வீச்சு மண்வீச்சுக்கிடையே என்பதை அறிய வேண்டும். அதிலும்சகலமும் உணர்ந்த சகலகலா வல்லுவர்களும், வெறும் சாமியாடிகளைக் கூடக் கண்டித்துப் பேசச் சக்தியற்றுக் கிடந்தகாலை, பெரியாரின் பெருங்காற்றுத் தமிழகத்திலே வீசி, நச்சுமரங்களை வேரொடு கீழே பெயர்த்தெறிந்ததுஎன்பதையும் உணர வேண்டும்.. பெரியார், கிளர்ச்சி பல நடத்தி அனுபவம் பெற்ற கிழவர். சீமான்களின் சீற்றத்தாலும்சுடப்பட முடியாத அளவு, பொதுமக்களின் தொடர்பு எனும் உரம் ஏறிய உள்ளமும் உடலும் படைத்தவர், தமிழகத்தின்தன்மானத்திற்கே வித்தூன்றிய தலைவர்.

வடு நிரம்பிய உடலும், வைரம் பாய்ந்த உள்ளமும், சிந்தனை ததும்பும் மனமும், செய்வகை அனுபவமும் தெரிந்த �சிறைக் கோட்டத்துக்கும், வீட்டுக்கும் வித்தியாசமிருப்பதாகவே கருதாத ஓய்வு தெரியாத பெரியாரின் தலைமையிலே கூடிநிற்கிறோம். அவர் களம் பல கண்டவர்! போர் பல நடத்தியவர்! போக வாழ்வை வெறுத்து, ஏழை வாழ்வைநடாத்தி வருபவர்.

உழைக்க வாருங்கள், பிழைக்கும் வழி என்ன என்று என்னைக் கேட்காதீர்கள், உங்கள் இனத்தை மீட்க வாருங்கள். அதற்குஏற்ற சக்தி உண்டா என்று என்னைக் கேட்காதீர்கள். போருக்கு வாருங்கள். அது எப்படி முடியும்? எப்போது முடியும்என்று என்னை கேட்காதீர்கள் � இதுவே பெரியாரின் அறிக்கை.

தமிழகத்தாரின் மனதிலே கிடக்கும் பழங்காலக் கொள்கைகளை, அவர், ஜாதீய முறையின் மூலம் வளர்ந்துள்ளமுதலாளித்துவத்தின் முடிக்கயிறுகள் என்று எடுத்துக்காட்டியே கண்டிக்கிறார். அவருடைய பெரும்படையின் பணி,சமதர்மத்ததுக்கே பயன்படுகிறது.

யாரை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டுமென வைதீக உலகம் எண்ணிற்றோ, அவர் இன்று, பெருத்த இயக்கமாகிவிட்டார். அவரே பெரியார், இஃதே அவருக்கும் பிறர்க்கும் உள்ள வித்தியாசம்.

சாக்ரடீஸ், லெனின், பிராட்லா, பர்னாட்ஷா, ரூசோ முதலிய பேரறிஞர்களும் புரட்சிகாரர்களும் எதற்காக உலகிலேபோற்றப்படுகிறார்களோ, அவ்வளவையும் ஒருங்கே திரட்டி ஒருங்கே திரட்டி ஓருருவில் பார்க்க வேண்டுமானல், அதுபெரியார்தான்.

அஞ்சாமைத் திறமையுடன் ஆள்பவர்

பகுத்தறிவுக்குக் கொஞ்சமும் பொருந்தாத பல கண்மூடி வழக்கங்கள், எப்படியோ நம் சமூகத்தில் வந்து புகுந்து, பலஅக்கிரமங்களையும் புரிந்து, நாட்டையும் நாட்டு மக்களையும் பாழ்படுத்தின. பாழ்படுத்தி வருகின்றன. விதவா மணம்கூடாதாம். சாஸ்திரத்தில் இதற்கு இடமில்லையாம். ஆண்களுக்கொரு நீதி, பெண்களுக்கொரு நீதி, இன்னும் இம்மாதிரிஎத்தனையோ மூடப்பழக்க வழக்கங்கள் தொட்ட இடத்திலெல்லாம் ஒரு தீய வழக்கம் வந்து குந்திக் கொண்டு, சமூகமுன்னேற்றத்தைப் பார்த்து கேலிச் சிரிப்புச் சிரித்துக் கொண்டிருக்கிறது. சில வேளை, இந்த பழைமைப் பாம்புபடுத்துறங்குகிறது. பேதாபேதம் கற்பிக்கிறது. கூடிவாழும் மனித வர்க்கத்தைப் பிரித்து வைத்து, கொலைகளுக்கு எதுவாகநின்று, அது கண்டு மகிழ்கிறது. மதத்தின் பேரால் படுகொலைகள்.

இந்த நாக பாம்பைத் தலையிலடித்துக் கொல்ல வேண்டும். சீர்திருத்த வீரர்கள் விறுகொண்டெழுந்து, இந் நற்றொண்டைச்செய்து வருகிறார்கள். நாட்டின் முன்னேற்றத்துக்கு இது முதல் தொண்டு, முக்கியமான தொண்டுங்கூட இதற்குவிதைபோட்டு, வீறு கொண்டு உழைத்தவர் நமது பெரியார் ஈ.வே.இராமசாமி அவர்களென்பதை, மறுக்கவோ �மறைக்கவோ எவராலும் இயலாது. இதற்காகப் பெரியார் அடைந்த இன்னல்கள், இகழ்ச்சிகள்... அப்பப்பா,செம்புந்தரமன்று!

பகுத்தறிவு இயக்கத் தந்தையின் நாவன்மையும், எழுத்து வன்மையும் அபாரம். அது மட்டுமா, அஞ்சாமையை வெகுதிறமையுடன் ஆளும் திறமை மிக்கவர்! பெரியார் எவ்வளவோ மகத்தான காரியங்களைச் சாதித்திருக்கிறார்.உதராணமாக ஒன்று சொல்கிறேன். தீண்டாமைக்கு � ஏன்� கண்ணாலும் பாராமைக்குப் பேர் பெற்ற தர்மராஜ்யம்மலையாளம், மக்களில் ஒரு வகுப்பாரைப் பார்த்தாலே தீட்டாம்., திட்டுவிடம் போலும். மலையாளத்தில் தீண்டாமையைமுதன்முதலில் நீக்குவதற்கு உழைத்தவர் பெரியார்தான். வைக்கம் சத்தியாகிரகத்தைத் திறம்பட நடத்தி வெற்றி கண்டவீரர். பின்னர் நடந்த நிகழ்ச்சிகளுக்கு இதுதான் விதை.

பெரியாரின் பகுத்தறிவுத் தீ, நாடெங்கும் பரவியது. இன்று இளைஞர்கள் உள்ளத்தில், அது வேரூன்றி விருஷமாகவளர்ந்துவிட்டது. வாழ்க பெரியார்.

கருத்து வேற்றுமைக்கு மதிப்பளிப்பவர்

முன்னாளில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் தொண்டு செய்தவர் என்ற முறையில் எவர்கேனும் பரிசில் வழங்கப் புகுந்தால், முதற் பரிசில் நாயக்கருக்கே செல்வதாகும்.

நாயக்கர் சுயமரியாதை, எனது சன்மார்க்க இயக்கத்தினின்று பிறந்தது. அதற்கும் இதற்கும் நூற்றுக்குத் தொண்ணூறு பங்கு ஒற்றுமை, பத்துப் பங்கு வேற்றுமை. வேற்றுமை எங்களுக்குள் போர் மூட்டியது. வேற்றுமைப் பகுதி ஆக்கம் பெறவில்லை. ஆக்கம் பெறாமையும், எங்கள் போர் நிறுத்தத்திற்கு ஒரு காரணம்.

இளமையில் யான் பொறுமை காப்பது அரிதாகவேயிருந்தது. காஞ்சி மகாநாட்டிலே நாயக்கருக்கும் எனக்கும் உற்ற கருத்து வேற்றுமை காரணமாக அவர் குடி அரசு எய்த சொல்லம்புகள், பொறுமையை என்பால் நிலைநிறுத்தின. சொல்லம்புகளை யான் தாங்கப் பெருந்துணை செய்தவர் நண்பர் நாயக்கரே.

நாயக்கர், சாதி வேற்றுமையை ஒழித்தவர், அதை நாட்டினின்றுங் களைந்தெறிய முயல்பவர். இராமசாமிப் பெரியார், ஈரோட்டிற் பிறந்து வளர்ந்தவர். அவர்தன் புகழோ, தென்னாட்டிலும், வடநாட்டிலும் பிறநாடுகளிலும் மண்டிக் கிடக்கிறது. காரணம் என்ன? தோழர் ஈ.வே.ரா.வின் உண்மையும், வாய்மையும் மெய்ம்மையுஞ் செறிந்த அறத்தொண்டாகும்.

ஈ.வே.ராவிடம் ஒருவித இயற்கைக்கூறு அமைந்துள்ளது. அதனின்றும் அவரது தொண்டு கனிந்தது. அஃதென்ன? அஃது அகவுணர்வு வளர்ந்து செல்லும் பேறு. இப்பேறு பலர்க்கு வாய்ப்பதில்லை. மிகச் சிலர்க்கே வாய்க்கும்.

உரிமை வேட்கை, அஞ்சாமை முதலியன ஈ.வே.ராவின் தோற்றத்திலேயே பொலிதல் வெள்ளிடைமலை.

பெரியார் கல்லூரி காணாதவர். பாடசாலைப் படிப்புக் குறைவு ஆனால் எவருக்கும் எளிதில் கிடைக்காத இயற்கையறிவை ஏராளமாகப் பெற்றிருக்கிறார்.

இவர் இயற்கைப் பெரியார். நான் என் வாழ்நாளில், இதுகாறும் செய்த ஆராய்ச்சிகளுள் அகப்படாத பல பெரியார் கருத்துக்களும், அரிய சோதனைகளும் இப்பெரியாரின் இயற்கையறிவில் உதித்திடக் காண்கிறேன்.

தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன் இது பெரியாருக்குத்தான் பொருந்தும்.


நேசம் மிகுந்த அண்ணா

அண்ணாவை அறிஞர் அண்ணா என்று சொல்லக் காரணம் அவரது அறிவின் திறம்தான். அவரது ஆட்சிக்காலத்தில்எந்தத் தமிழனுடைய உரிமையையும் அவர் புறக்கணிக்கவில்லை. அதனாலேயே தமிழர் சமுதாயத்தினுடைய அன்பைஇதுவரை யாரும் பெற்றிராத அளவுக்கு அண்ணா பெற்றிருக்கிறார் என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயமாக இருக்கிறது.

நாட்டில் எல்லாக் கட்சியாருடனும் எல்லா மக்களுடனும் மிக்க அன்புக்குரியவராகவும் நேசமாகவும் இருந்து வந்தார்.அண்ணாவின் குணம் மிக தாட்சண்ய சுபாவமுடையது. யாரையும் கடிந்து பேசமாட்டார். தன்னால் முடியாதகாரியமாய் இருந்தாலும் முடியாது என்று சொல்லத் தயங்குவார்.